Showing posts with label 31. வெகுளாமை. Show all posts
Showing posts with label 31. வெகுளாமை. Show all posts

Saturday, May 30, 2009

31. வெகுளாமை

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்.
(301)
விளக்கம்:

தனக்குச் சொல்லக்கூடிய இடத்திலும் சினத்தைக் காப்பவனே காப்பவன்: செல்லாத இடத்திலே காத்தால் என்ன? காவாதிருந்தால் என்ன?


செல்லா இடத்துச் சினந்தீது செல்இடத்தும்
இல்அதனின் தீய பிற.
(302)
விளக்கம்:

செல்லாத இடத்திலே சினம் கொள்வதனால் தீமை வரும். செல்லும் இடத்திலும் அதனிலும் தீமையானது வேறு ஏதும் இல்லை.

மறத்தல் வெகுளியை யார்மட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.
(303)
விளக்கம்:

எவரிடத்திலும் சினங்கொள்ளாமல், அவர் தீயசெயலை மறப்பதே நல்லது: தீமையான விளைவுகள் அச்சத்தினால் வந்து சேரும்.

நகையும் உவகையும் கொல்லும் சினத்திற்
பகையும் உளவோ பிற.
(304)
விளக்கம்:

ணிகமலர்ச்சியான நகையும், அகமலர்ச்சியான உவகையையும் கொல்லும் சினத்தினும், உயிருக்குப் பகையானவை வேறு உளவோ?

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.
(305)
விளக்கம்:

ஒருவன் தன்னை காக்க விரும்பினால் சினம் எழாமல் காத்துக் கொள்க. காவாதிருந்தால், அச் சினமானது அவனையே ணிடிவில் கொன்றுவிடும்.

சினம்என்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.
(306)
விளக்கம்:

சேர்ந்தாரைக் கொல்லும் இயல்புடைய சினமானது, தன் இனத்தார் என்னும் பாதுகாவலான தெப்பத்தையும் சுட்டு எரித்து விடும்.

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
(307)
விளக்கம்:

சினத்தையே செல்வம் என்று நினைத்து மேற்கொண்டவன் அதனாற் கெடுதல், நிலத்திலே அறைந்தவனின் கையானது நோவிலிருந்து தப்பாததுபோல் உறுதியாகும்.

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.
(308)
விளக்கம்:

பலமாக கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் வீழ்ந்தாற் போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதும், கூடுமானால், அவன்பால் வெகுளாமையே நன்று.

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.
(309)
விளக்கம்:

ஒருவன் உள்ளகத்தாலும் சினத்தைப்பற்றி நினையாதவன் என்றால், அப்படிப்பட்டவன் நினைத்தது எல்லாம் உடனே அவனை வந்தடையும்.

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.
(310)
விளக்கம்:

அளவு கடந்து சினத்திலே ஈடுபட்டவர் இறந்தவரைப் போன்றவர்; சினத்தை கைவிட்டவரோ முற்றும் துறந்த மேலோருக்கு இணையாவர்.