Showing posts with label 100. பண்புடைமை. Show all posts
Showing posts with label 100. பண்புடைமை. Show all posts

Sunday, May 31, 2009

100. பண்புடைமை

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
(991)
விளக்கம்:

எல்லாரிடத்தும் எளிய செவ்வியராதல் உடையவருக்கு, பண்புடைமை என்னும் நன்னெறியினை அடைந்து சிறப்படைதலும், எளிதென்று சொல்லுவார்கள்.


அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
(992)
விளக்கம்:

பிறர்மேல் அன்புடைமையும், உலகத்தோடு அமைந்த குடியிலே பிறத்தலும் ஆகிய இவ்விரண்டும் ஒத்து வருதல் பண்புடைமையால் என்று உலகத்தார் சொல்லுவர்.

உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
(993)
விளக்கம்:

உடம்பால் ஒருவரோடு ஒருவர் ஒத்திருத்தல், ஒருவனுக்கு நல்லவரோடு சமநிலையைத் தந்துவிடாது. செறியத் தகுந்த பண்பால் ஒத்திருத்தலே சமநிலை தரும்.

நயனோடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்பு பாராட்டும் உலகு.
(994)
விளக்கம்:

நீதியையும் அறத்தையும் விரும்புதலால், பிறருக்கும் தமக்கும் பயன்படுதலை உடையவரது பண்பினை, உலகத்தார் அனைவரும் போற்றிக் கொண்டாடிப் புகழ்வார்கள்.

நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.
(995)
விளக்கம்:

தன்னை இகழ்தல் விளையாட்டின்போதும் துன்பமானது. ஆகவே, பாடு அறிவாரிடத்து பகைமை உள்ளவிடத்திலும் இகழ்தல் இன்றி, இனிய பண்புகளே நிறைந்திடும்.

பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்.
(996)
விளக்கம்:

பண்புடையாரிடத்தே படுதலால் உலகியல் எப்போதும் உளதானதாய் வந்து கொண்டிருக்கின்றது. அங்ஙனம் இல்லையானால், அது மண்ணினுட் புகுந்து மாய்ந்து விடும்.

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.
(997)
விளக்கம்:

நன்மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர்கள், அரத்தைப் போலக் கூர்மை உடையவர் என்றாலும், ஓரறிவேயுள்ள மரத்தைப் போன்றவர்கள் ஆவர்.

நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றா ராதல் கடை.
(998)
விளக்கம்:

தம்மோடும் நட்பினைச் செய்யாதவராகப் பகைமையையே செய்து நடப்பவரிடத்தும், தாம் பண்புடையவராக உதவி புரியாதிருத்தல், சான்றோருக்குக் குற்றமாகும்.

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.
(999)
விளக்கம்:

பண்பில்லாமையாலே ஒருவரோடு கலந்து பேசி உள்ளம் மகிழமாட்டாதவர்களுக்கு, மிகவும் பெரிய இந்த உலகமானது பகற்பொழுதிலும் இருண்டு கிடப்பதாகும்.

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
பகலும்பாற் பட்டன்று இருள்.
(1000)
விளக்கம்:

பண்பில்லாதவன் முன்னை நல்வினையாலே பெற்ற பெருஞ்செல்வமானது, நல்ல ஆவின்பால் கலத்தின் குற்றத்தால் திரிதல்போல, ஒருவருக்கும் பயன்படாமல் போகும்.