Showing posts with label 53. சுற்றந் தழால். Show all posts
Showing posts with label 53. சுற்றந் தழால். Show all posts

Sunday, May 31, 2009

53. சுற்றந் தழால்

பற்றற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே யுள.
(521)
விளக்கம்:

ஒருவன் வறுமையாளன் ஆகிய போதும், பழையபடியே அவனிடம் அன்பு பாராட்டுதல் என்பது சுற்றத்தார் இடம் மட்டுமே காணப்படும் தனி இயல்பாகும்.


விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.
(522)
விளக்கம்:

அன்பில் நீங்காத சுற்றத்தார் அமைந்தனரானால், அது, குறைவில்லாமல் வளருகின்ற பல செல்வ நலங்களையும் ஒருவனுக்குக் கொடுப்பதாகும்.

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று .
(523)
விளக்கம்:

சுற்றாத்தாரோடு மனங்கலந்து பழகாத ஒருவனுடைய வாழ்வானது, கரையிலாத குளப்பரப்பிலே நீர் நிரம்பினாற் போலப் பயனற்றதாகும்.

சுற்றத்தார் சுற்றப்பட ஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன்.
(524)
விளக்கம்:

சுற்றாத்தாரால் தான் சூழ்ந்திருக்கும்படியாக வாழ்தலே, ஒருவன் செல்வத்தைப் பெற்றதனால் அடைந்த பயனாக இருக்க வேண்டும்.

கொடுத்தாலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தான் சுற்றப் படும்.
(525)
விளக்கம்:

சுற்றத்தார்க்கு வேண்டிய பொருளைக் கொடுத்தலும், அவரோடு இனிதாகப் பேதலும் செய்வானாயின், அவன் சுற்றத்தார் பலராலும் சூழப்படுவான்.

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத் தில்.
(526)
விளக்கம்:

மிகுதியாகக் கொடுக்கும் இயல்புள்ளவனாயும், சினத்தை விரும்பாதவனாயும் ஒருவன் இருந்தால், அவனைப் போல் சுற்றம் உடையவர் உலகில் யாரும் இல்லை.

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே யுள.
(527)
விளக்கம்:

காக்கை உணவைக் கண்டதும் மறைக்காமல் தன் இனத்தைக் கூவி உடனிருந்தே உண்ணும், அத்தகைய இயல்பினருக்கே சுற்றப்பெருக்கமும் உண்டாகும்.

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.
(528)
விளக்கம்:

எல்லோரையும் ஒரே தன்மையாகப் பொதுப்படையாக நோக்காது, அவரவர் தகுதிக்கேற்ப நோக்கிச் செய்வன செய்தால், அச்சிறப்பைக் கருதிச் சுற்றத்தார் சூழ்வர்.

தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.
(529)
விளக்கம்:

சுற்றத்தாராக இருந்து தன்னைப் பிரிந்தவர்கள், பிரிவதற்கு ஏற்பட்ட காரணத்தை நீக்கிவிட்டால், மீண்டும் அவர்களே வந்து சேர்ந்திப்பார்கள்.

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்.
(530)
விளக்கம்:

காரணம் இல்லாமல் தன்னிடம் இருந்து பிரிந்து, பின் ஒரு காரணத்தால் தன்பால் வந்த உறவினனை, அரசன் அதைச் செய்து அவனைத் தழுவிக் கொள்ளவேண்டும்.