Showing posts with label 78. படைச் செருக்கு. Show all posts
Showing posts with label 78. படைச் செருக்கு. Show all posts

Sunday, May 31, 2009

78. படைச் செருக்கு

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை
முன்நின்று கல்நின் றவர்.
(771)
விளக்கம்:

பகைவரே, என் தலைவனின் முன்னே எதிர்த்து வந்து நில்லாதீர். அவன் முன் எதிர்த்து வந்து நின்று களத்தில் வீழ்ந்து பட்டு நடுகற்களாக நிற்பவர் மிகப் பலர்.


கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
(772)
விளக்கம்:

காட்டு முயலைக் குறி தவறாமல் எய்து வீழ்த்திக் கொன்ற அம்பினைக் காட்டிலும், யானை மேல் எறிந்து குறி தவறிய வேலினைத் தாங்குதலே படை மறவருக்கு இனிதாகும்.

பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.
(773)
விளக்கம்:

பேராண்மை என்பது பகைவர்க்கு அஞ்சாமல் எதிர்நின்று போரிடும் ஆண்மையே. அவருக்கு ஒரு கேடு வந்தவிடத்து உதவி நிற்கும் ஆண்மையோ அதனினும் சிறந்ததாகும்.

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.
(774)
விளக்கம்:

தன் கைவேலினைக் களிற்றின் மீது எறிந்து விட்டுப் படைக்கலமின்றி வருபவன், தன்னுடம்பில் தைத்திருந்த பகைவரின் வேலைப் பறித்து மகிழ்ச்சி அடைவான்.

விழித்தகண் வேல்கொண்டு எறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
(775)
விளக்கம்:

பகைவர் மீது சினந்து பார்த்த கண்கள், அவர் தம் கைவேலை எறிந்த காலத்தினும், வெகுட்சியை மாற்றி இமைக்குமானால் மறவருக்கு இழிவு தரும் அல்லவோ?

விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள்
வைக்குந்தன் நாளை எடுத்து.
(776)
விளக்கம்:

கழிந்துபோன தன் வாழ்நாட்களைக் கணக்கிட்டுப் பார்த்து, விழுப்புண் படாத நாட்களை எல்லாம், தான் தவறவிட்ட நாட்களுள் சேர்ப்பவனே படை மறவனாவான்.

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.
(777)
விளக்கம்:

உலகைச் சூழ்ந்து பரவும் புகழையே விரும்பி, உயிரை வெறுத்துப் போரிடும் ஆண்மையுள்ள மறவரின் காலிலே விளங்கும் கழல்களே அழகு உடையவாகும்.

உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினுஞ்சீர் குன்றல் இலர்.
(778)
விளக்கம்:

போர்க்களத்திலே தம் உயிருக்கும் அஞ்சாமல் போரிடும் படை மறவர்கள், தம் அரசனே தடுத்தாலும் தம் மனவூக்கத்தில் சிறிதும் குறைய மாட்டார்கள்.

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.
(779)
விளக்கம்:

தாம் உரைத்த சூளுரையிலிருந்து தப்பாமல் போரினைச் செய்து, அதனிடத்தில் சாகிறவரை, எவர் தாம் சூளுரை பிழைத்ததற்காகத் தண்டிப்பவர்கள்.

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.
(780)
விளக்கம்:

தம்மைப் பேணியவரின் கண்கள் நீர் சிந்தும்படியாகக் களத்தில் சாவைத் தழுவினால், அத்தகைய சாவு ஒருவன் இரந்தும் கொள்ளத் தகுந்த சிறப்பினை உடையதாகும்.