Sunday, May 31, 2009

46. சிற்றினம் சேராமை

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
(451)
விளக்கம்:

பெரியோர் சிற்றினத்தைக் காணின் அஞ்சி ஒதுங்குவார்கள்; சிறியாரோ அதுவே தம் சுற்றமாகக் கருதித் தம்முடன் சேர்த்துக் கொள்வார்கள்.


நிலத்துஇயல்பான் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்பது ஆகும் அறிவு.
(452)
விளக்கம்:

நிலத்தின் தன்மையால், அதிற் சேர்ந்த நீரின் தன்மை மாறுபடும்; அவ்வாறே, மாந்தர்க்கும் அவரவர் சேர்ந்த இனத்தின் தன்மைப்படியே அறிவும் ஆகும்.

மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான்ஆம்
இன்னான் எனப்படும் சொல்.
(453)
விளக்கம்:

மாந்தர்க்கு உணர்ச்சி என்பது மனத்தின் தன்மையால் உண்டாவதாகும்; இன்னவன் எனப்படும் சொல்லானது அவனவன் சேர்ந்த இனத்தாலே உண்டாகும்.

மனத்துளது போலக் காட்டி ஒருவற்கு
இனத்துளது ஆகும் அறிவு.
(454)
விளக்கம்:

ஒருவனது மனத்தில் உள்ளதுபோலக் காட்டினாலும், ஒருவனுக்கு அவன் சேர்ந்த இனத்தையொட்டியதாகவே அறிவு உண்டாகும்.

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.
(455)
விளக்கம்:

மனம் தூய்மையாதலும், செய்யும் தொழில் தூய்மையாதலும் ஆகிய இரண்டும், தான் சேர்ந்த இனத்தின் தூய்மையை ஒட்டியே வரும்.

மனந்தூயார்க்கு எச்சம்நன்று ஆகும் இனந்தூயார்க்கு
இல்லைநன்று ஆகா வினை.
(456)
விளக்கம்:

மனத்திலே தூய்மை உடையவர்களுக்கு எஞ்சி நிற்பதான புகழ் முதலியவை நன்றாக ஆகும்; சேர்ந்த இனம் தூய்மையானவர்க்கு நன்மையாகாத செயல் யாதுமில்லை.

மனநலம் மன்உயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.
(457)
விளக்கம்:

மனத்தின் நல்ல நிலையே மன்னுயிர்க்கு ஆக்கம் தரும்; இனத்தின் நல்ல துணையோ எல்லா வகையான புகழையும் ஒருவனுக்குத் தருவதாகும்.

மனநலம் நன்குஉடையர் ஆயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்பு உடைத்து.
(458)
விளக்கம்:

சான்றோர் மனநலத்தினை நல்லபடியே உடையவரானாலும், அவருக்குத் தாம் சேர்ந்திருக்கும் இனத்தது நலமே எல்லாப் புகழையும் தரும்.

மனநலத்தின் ஆகும் மறுமை மற்றுஅஃதும்
இனநலத்தின் ஏமாப்பு உடைத்து.
(459)
விளக்கம்:

மனத்தின் செம்மையால் மறுமை இன்பம் உண்டாகும்; மற்று அந்த மறுமையும், சேர்ந்த இனத்தின் செம்மையால் நல்ல பாதுகாப்புடன் இருக்கும்.

நல்லினத்தின் ஊங்கும் துணைஇல்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.
(460)
விளக்கம்:

நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாவது உலகத்தில் யாதுமில்லை; தீய இனத்தைவிட அல்லல் படுத்துவதும் உலகத்தில் யாதுமில்லை.

No comments:

Post a Comment