Showing posts with label 39. இறைமாட்சி. Show all posts
Showing posts with label 39. இறைமாட்சி. Show all posts

Sunday, May 31, 2009

39. இறைமாட்சி

படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.
(381)
விளக்கம்:

படை, குடி, விளைபொருள், அமைச்சர், நண்பர், அரண் என்னும் ஆறு உறுப்புகளையும் சிறப்பாகப் பெற்றவன் அரசருள் சிங்க ஏறு ஆவான்.


அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு.
(382)
விளக்கம்:

அஞ்சாமை, எளியோர்க்குக் கொடுத்து உதவும் ஈகை, அறிவு, ஊக்கம் என்னும் நான்கும் குறைவில்லாமல் இருப்பது வேந்தருக்கு இயல்பு ஆதல் வேண்டும்.

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலன்ஆள் பவர்க்கு.
(383)
விளக்கம்:

நாடாளும் மன்னனுக்கு, விரைவாகச் செயலைச் செய்தலும், அதனை அறியும் அறிவும், செய்யும் துணிவும் என்னும் மூன்று திறனும் நீங்காமல் இருக்க வேண்டும்.

அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா
மானம் உடையது அரசு.
(384)
விளக்கம்:

அரச நெறியிலிருந்தும் வழுவாமலும், நெறியல்லாதவைகளை நாட்டைவிட்டு நீக்கியும், மறமாட்சியில் தாழ்ச்சியின்மை என்னும் மானமும் உடையவனே அரசன்.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.
(385)
விளக்கம்:

பொருள் வருவாய்க்கான வழிகளை உண்டாக்கலும், வரும் பொருளைச் சேமித்தலும், பாதுகாத்தலும், நாட்டின் நலத்துக்குத் தக்கபடி செலவிடுதலும் வல்லதே அரசு.

காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.
(386)
விளக்கம்:

தன்னைக் காண வருவார்க்குக் காட்சிக்குத் தான் எளியனாயும், கடுஞ்சொல் சொல்லாதவனாயும் அரசன் விளங்கினால், அவன் நாட்டை உலகமே உயர்வாகக் கூறும்.

இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்துஇவ் வுலகு.
(387)
விளக்கம்:

இனிமையான சொல்லோடு, துன்புறுவார்க்கு வேண்டியதைக் கொடுத்தும் காப்பாற்றவல்ல அரசன், தன் மனத்தில் கருதியவாறே உலகமும் அமையும்.

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறைஎன்று வைக்கப் படும்.
(388)
விளக்கம்:

முறைமையோடு ஆட்சிசெய்து மக்களைக் காப்பாற்றும் மன்னவன், அம் மக்களுக்குத் தெய்வம் என்று சொல்லப்படும் உயர்நிலையிலே வைத்து மதிக்கப்படுவான்.

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.
(389)
விளக்கம்:

சான்றோர்கள் கண்டித்துச் சொல்வது கேள்விக்கு வெறுப்பாயிருந்தாலும், பொறுத்து, அக்குறைகளை நீக்கும் பண்புள்ள வேந்தனின் குடைநிழலில், உலகம் தங்கும்.

கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க்கு ஒளி.
(390)
விளக்கம்:

கொடையும், இரக்க குணமும், செங்கோன்மையும், குடிகாத்தலும் என்னும் நான்கையும் சிறப்பாகப் பெற்றவன் வேந்தர்க்கு எல்லாம் ஒளிவிளக்கு ஆவான்.