Showing posts with label 17. அழுக்காறாமை. Show all posts
Showing posts with label 17. அழுக்காறாமை. Show all posts

Tuesday, May 26, 2009

17. அழுக்காறாமை

17. அழுக்காறாமை

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
(161)
விளக்கம்:

தன் நெஞ்சில் பொறாமை எண்ணம் இல்லாத தன்மையினையே ஒருவன், தனக்கு உரிய வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ வேண்டும்.


விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.
(162)
விளக்கம்:

ஒருவன் எவரிடத்திலும் எப்போதும் பொறாமை இல்லாமல் இருக்கின்ற தன்மையைப் பெறுவானாயின், மேலான பேறுகளில் அதற்கு இணையாகச் சிறந்ததது எதுவும் இல்லை.

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
(163)
விளக்கம்:

பிறனுடைய ஆக்கத்தைக் கண்டதும், அதனைப் பாராட்டாமல் பொறாமைப்படுகிறவன், தனக்கு அறனும் ஆக்கமும் சேர்வதை விரும்பாதவனே ஆவான்.

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
(164)
விளக்கம்:

'பொறாமை' என்னும் தவறான எண்ணத்தால் துன்பமே உண்டாவதை அறிந்து, அறிவாளர், பொறாமையால் தீவினைகளைச் செய்யமாட்டார்கள்.

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது.
(165)
விளக்கம்:

பொறாமை உடையவரைக் கெடுப்பதற்கு எந்தப் பகையும் வேண்டாம் ;அதுவே போதும் ; பகைவர் கேடு, செய்யத் தவறினாலும், அது தவறாமல் கேட்டைத் தந்துவிடும்.

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
(166)
விளக்கம்:

இன்னொருவன் பிறனுக்குக் கொடுப்பதைப் பார்த்தும் பொறாமைப்படுகிறவனின் குடும்பம், உடுக்க உடையும், உண்ண உணவும் இல்லாமல் கெடும்.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
(167)
விளக்கம்:

பொறாமை உடையவனைக் கண்டு திருமகள் வெறுத்து, அவனைத் தன் தமக்கையான மூதேவிக்குக் காட்டி, தான் அவனை விட்டு நீங்கிப் போய்விடுவாள்.

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.
(168)
விளக்கம்:

பொறாமை என்னும் ஒப்பற்ற கொடிய 'பாவி', ஒருவனது செல்வத்தையும் கெடுத்து, அவனைத் தீய வழியிலும் செல்லும்படி செலுத்தி விடும்.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
(169)
விளக்கம்:

பொறாமை கொண்ட நெஞ்சத்தானின் ஆக்கமும், பொறாமையற்ற சிறந்தவனுடைய கேடும், மக்களால் எப்போதும நினைக்கப்படும்.

அழுக்காறு அகன்றாரும் இல்லை அஃதில்லார்
பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்.
(170)
விளக்கம்:

உலகில் பொறாமையினால் மேன்மை அடைந்தாரும் இல்லை ; பொறாமை இல்லாததால் பொருள் பெருக்கத்தில் குறைந்த வறுமையானவரும் இல்லை.