Showing posts with label 32. இன்னா செய்யாமை. Show all posts
Showing posts with label 32. இன்னா செய்யாமை. Show all posts

Sunday, May 31, 2009

32. இன்னா செய்யாமை

சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
(311)
விளக்கம்:

சிறப்பை தருகின்ற பெருஞ்செல்வமே பெற்றாலும், பிறருக்கு துன்பம் செய்யாதிருத்தலே குற்றமற்ற அறிவாளரின் கொள்கையாகும்.


கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
(312)
விளக்கம்:

வஞ்சம் கொண்டு ஒருவன் துன்பம் செய்தபோதும், திரும்ப அவனுக்குத் துன்பம் தருவனவற்றைச் செய்யாதிருத்தலே குற்றமற்ற அறிவாளரின் கொள்கை.

செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும்.
(313)
விளக்கம்:

எதுவும் செய்யாத போதிலேயே தீமை செய்தவருக்கும், பதிலுக்குத் துன்பத்தைச் செய்தால், அது பின்னர் மீளாத் துயரத்தையே தரும்.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
(314)
விளக்கம்:

துன்பம் செய்தவரைத் தண்டித்தல் என்பது, அவர் தம் செய்கையை நினைத்து வெட்கப்படும் படியாக அவருக்கு நன்மைகளைச் செய்துவிடுதல் ஆகும்.

அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.
(315)
விளக்கம்:

பிறிதோர் உயிரின் துன்பத்தை தன் துன்பம் போலக் கொள்ளாத இடத்தில், அறிவினாலே ஆகும் பயன்தான் ஏதும் உளதாகுமோ?

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.
(316)
விளக்கம்:

துன்பம் தருவது எனத் தான் உணர்ந்த ஒரு செயலைப் பிறரிடத்தே செய்தலை ஒருவன் எப்போதும் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.
(317)
விளக்கம்:

எவ்வளவினது ஆனாலும், எக்காலத்தில் ஆனாலும், எவருக்கும், மனத்தினாலும் பொருந்தாத துன்பங்களைச் செய்யாமலிருத்தலே சிறப்பு.

தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்.
(318)
விளக்கம்:

தன் உயிர்க்குத் துன்பமாதலைத் தான் அறிந்து வருந்தும் ஒருவன், மற்றைய உயிர்களுக்குத் துன்பத்தைச் செய்தல் என்பது, என்ன அறியாமையாலோ?

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.
(319)
விளக்கம்:

முற்பகலில் பிறருக்குத் துன்பத்தைச் செய்தால், பிற்பகலில் தமக்குத் துன்பங்கள் தாமாகவே வந்து சேரும் என்பதை அறிதல் வேண்டும்.

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.
(320)
விளக்கம்:

துன்பம் தருவன எல்லாம் துன்பம் செய்தவரின் மேல் சென்று சேர்வன. ஆகவே, துன்பப்படாமலிருப்பதை விரும்புகிறவன் பிறருக்குத் துன்பம் செய்யாதிருப்பர்.