Showing posts with label 36. மெய் உணர்தல். Show all posts
Showing posts with label 36. மெய் உணர்தல். Show all posts

Sunday, May 31, 2009

36. மெய் உணர்தல்

பொருளல் லவற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
(351)
விளக்கம்:

உண்மையில் பொருளற்றவைகளைப் பொருளாகக் கருதி உணர்கின்ற மயக்கத்தினாலேயே, சிறப்பற்ற பலவகைப் பிறப்புகளும் உண்டாகின்றன.


இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.
(352)
விளக்கம்:

மயக்கம் நீங்கிய குற்றமற்ற மெய்யறிவு உடையவர்களுக்கு, அவ்வுணர்வு, இருளிலிருந்து விடுபட்டு அடைகின்றதான இன்பத்தையும் கொடுக்கும்.

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து.
(353)
விளக்கம்:

ஐயத்திலிருந்து நீங்கித் தெளிவுபெற்ற மெய்யறிவாளருக்கு, இந்த உலகத்தை விடவும், வானம் மிகவும் அண்மையானதும், உறுதியானதும் ஆகும்.

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு
(354)
விளக்கம்:

மெய்யுணர்வு இல்லாதவர்களுக்கு, ஐம்புலன்களின் உணர்வுகளை எல்லாம் முறைப்படியே பெற்றுள்ளபோதிலும் பயன் யாதும் இல்லை.

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
(355)
விளக்கம்:

எந்த பொருளும் எந்த தன்மையோடு தோன்றினாலும், மயங்காமல், அந்த பொருளின் உண்மையான இயல்பைத் தெளிவாக காண்பதே அறிவாகும்.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.
(356)
விளக்கம்:

கற்க வேண்டிய கல்வியைக் கற்று, மெய்ப்பொருளையும் அறிந்தவர், மீண்டும் இவ் வுலகில் பிறவிகளைத் தாம் எடுத்து வராத நெறியை மேற்கொள்வார்கள்.

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
(357)
விளக்கம்:

என்றும் இருக்கும் மெய்ப்பொருளை உள்ளம் ஆராய்ந்து அறிந்துவிட்டால், மீண்டும் தனக்குப் பிறப்பு உள்ளதென்று அவன் எண்ண வேண்டாம்.

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.
(358)
விளக்கம்:

பிறப்புக்குக் காரணமான அறியாமைகள் நீங்குவதற்குச் சிறப்பான துணை எனப்படும் செம்பொருளை முயன்று காண்பதே மெய்யுணர்வு ஆகும்.

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.
(359)
விளக்கம்:

எல்லாப் பொருள்களுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து, பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்குரிய துன்பங்கள் திரும்பவும் வந்து சாரமாட்டா.

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
(360)
விளக்கம்:

காமம், வெகுளி, மயக்கம் என்னும் இவை மூன்றின் பெயர்களைக்கூட உள்ளத்திலிருந்து அறவே நீக்கிவிட்டால், பிறவித் துன்பமும் கெடும்.