Showing posts with label 85. புல்லறிவாண்மை. Show all posts
Showing posts with label 85. புல்லறிவாண்மை. Show all posts

Sunday, May 31, 2009

85. புல்லறிவாண்மை

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மைஇன்மையா வையாது உலகு.
(841)
விளக்கம்:

அறிவில்லாத தன்மையே, வறுமையுள் கொடிய வறுமை. பிற, பொருள் இல்லாத வறுமையை உலகம் நிலையான வறுமையாக ஒருபோதும் கருதாது.


அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்.
(842)
விளக்கம்:

அறிவில்லாத ஒருவன், மனமகிழ்ச்சியோடு ஒரு பொருளை ஒருவனுக்குத் தருவதென்பது, பெறுவானது தவத்தின் பயனே அல்லாமல், வேறு எதனாலும் இல்லை.

அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.
(843)
விளக்கம்:

அறிவில்லாதவர், தமக்குத் தாமே செய்து கொள்ளும் வருத்தம் தரக்கூடிய துன்பங்கள், அவரது பகைவராலும் அவருக்குச் செய்ய முடியாதவையாக இருக்கும்.

வெண்மை எனப்படுவது யாதெனில் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.
(844)
விளக்கம்:

அறியாமை என்று சொல்லப்படுவது என்னவென்றால், அறிவில்லாதவனும் "தான் அறிவுடையவன்" என்று நினைத்துச் செருக்கு அடைதலாகும்.

கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.
(845)
விளக்கம்:

தான் கல்லாத ஒரு செயலையும், அறிவில்லாததால் துணிந்து செய்யத் தொடங்குதல், எதையும் குறையில்லாமல் செய்யவல்ல செயல்களிலும், ஐயத்தைத் தரும்.

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.
(846)
விளக்கம்:

தம்மிடத்திலே உள்ள குற்றங்கள் மறையாத போது, உடல் முழுவதும் ஆடைகளாலே மறைத்துக் கொண்டு, நல்லவர் போலத் திரிதல், அறிவற்ற தன்மை ஆகும்.

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.
(847)
விளக்கம்:

அரியவான மறைகளைக் கற்றும், உண்மைப் பொருளை அறியாமல் சோர்வு அடைகின்ற அறிவில்லாதவன், தனக்குத் தானே பெரிய தீமைகளைச் செய்து கொள்வான்.

ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.
(848)
விளக்கம்:

அறிவுடையோர் "இன்னின்னபடி செய்க" என்று ஏவிய போதும், அதன்படி செய்யமாட்டாதவன், தானும் தெளியாதவன், உயிர் போகுமளவும் துன்பம் அடைவான்.

காணாதாற் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.
(849)
விளக்கம்:

தன் அறியாமையால், தான் கண்டபடியே பிறருக்குக் காட்டுபவன், தானும் உண்மை காணாதவன், என்றுமே தான் கண்டபடி காண்பவனாகவே விளங்குவான்.

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.
(850)
விளக்கம்:

உலகத்தார் "உண்டு" என்னும் ஒரு பொருளை, தன்னுடைய அறியாமையாலே "இல்லை" என்று சொல்லுபவன், உலகத்தாரால் பேயாகக் கருதி ஒதுக்கிவைக்கப்படுவான்.