Showing posts with label 7. மக்கட்பேறு. Show all posts
Showing posts with label 7. மக்கட்பேறு. Show all posts

Tuesday, May 26, 2009

7. மக்கட்பேறு

7. மக்கட்பேறு

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.
(61)
விளக்கம்:

பெறுகின்ற செல்வங்களாகிய அவற்றுள், அறிவறிந்த மக்களைப் பெறுவதைக் காட்டிலும் சிறந்ததாக, பிற எதனையும் யாம் கருதுவதில்லை.


எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
(62)
விளக்கம்:

பழிச்சொல் ஏற்படாத நற்பண்புடைய மக்களைப் பெற்றிருந்தால், ஒருவனுக்கு ஏழு பிறப்பிலும் தீவினைப்பயன்களாகிய துன்பங்கள் அணுகா.

தம்பொருள் என்ப தம்மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
(63)
விளக்கம்:

நம்முடைய சொத்து என்று போற்றுவதற்கு உரியவர் நமது குழந்தைகளே ஆவர். மக்களாகிய அவரர்களுடைய சொத்துக்கள், செல்வங்கள், அவரவர் வினைப்பயனால் வந்தடையும்.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
(64)
விளக்கம்:

தம்முடைய குழந்தைகளின் சின்னஞ்சிறு கைகளால் கிடைக்கும் மிகவும் எளிமையுடைய கூழேயானாலும் கூட, அது பெற்றோருக்கு அமிழ்தினும் இனிமையானதாயிருக்கும்.

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
(65)
விளக்கம்:

தம் மக்களின் உடம்பைத் தொடுதல் உடலுக்கு இன்பமாகும் அவர்களின் மழலைச் சொற்களைக் கேட்டல் செவிக்கு மிகுந்த இன்பமாகும்.

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
(66)
விளக்கம்:

தம் மக்களின் மழலைப் பேச்சைக் கேட்டு இன்புறாதவர்களே, குழலிசை இனியது, யாழிசை இனியது என்று புகழ்ந்து கூறுவார்கள்.

தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
(67)
விளக்கம்:

ஒரு தந்தை தன் மகனுக்குச் செய்யும் நல்ல உதவி, அவனைக் கற்றோர் அவையிலே முதன்மை பெற்றவனாக இருக்கச் செய்தலே ஆகும்.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
(68)
விளக்கம்:

தம்மைக் காட்டினும், தம் மக்கள் அறிவுடையவராக விளக்கம் பெறுதல், பெற்றோருக்கு மட்டுமல்லாமல், பெரிய உலகிலுள்ள உயிர்களுக்கெல்லாம் இனிமையானது ஆகும்.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
(69)
விளக்கம்:

தன் மகனைச் சான்றாளன் என்று பலரும் போற்றுவதைக் கேள்வியுறும் தாய், அவனைப் பெற்ற பொழுதிலும் பெரிதாக மகிழ்வாள்.

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனுஞ் சொல்.
(70)
விளக்கம்:

மகன், தந்தைக்குச் செய்யும் உதவி இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன நோன்பு செய்தானோ என்னும் புகழ்ச் சொல்லே ஆகும்.