Showing posts with label 92. வரைவின் மகளிர். Show all posts
Showing posts with label 92. வரைவின் மகளிர். Show all posts

Sunday, May 31, 2009

92. வரைவின் மகளிர்

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்.
(911)
விளக்கம்:

அன்பால் விரும்பாமல் அவன் தரும் பொருளையே விரும்பும் மகளிரது, அவனையே அன்பால் விரும்பியது போலப் பேசும் பேச்சும், அவனுக்குப் பின்னர் துன்பம் தரும்.



பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்.
(912)
விளக்கம்:

ஒருவனிடமுள்ள பொருளின் அளவை அறிந்து, அதை அடையும் வரை பண்பைப் பற்றிப் பேசும் பண்பில்லாத மகளிரது நடத்தையை, ஆராய்ந்து விட்டு விடுக.

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று.
(913)
விளக்கம்:

கொடுக்கும் பொருளையே விரும்பும் பொது மகளிரது பொய்யான முயக்கமானது, பிணம் எடுப்பவர் இருட்டறையில் முன் அறியாத பிணத்தைத் தழுவியது போலாகும்.

பொருட்பொருளார் புன்னலம் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்.
(914)
விளக்கம்:

இன்பமாகிய பொருளை இகழ்ந்து, பொருளையே விரும்பும் பொது மகளிரது இழிந்த இன்பத்தை, அருளோடு கூடிய பொருளை ஆராய்ந்து செய்யும் அறிவாளர் விரும்பார்.

பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.
(915)
விளக்கம்:

இயற்கையான மதிநலத்தால் மாட்சிமைப்பட்ட அறிவினை உடையவர்கள், பொருள் தருவார்க்கெல்லாம் பொதுவான ஆசை காட்டும் மகளிரது இழிவான நலத்தைத் தீண்ட மாட்டார்கள்.

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்.
(916)
விளக்கம்:

தம் அழகால் செருக்கடைந்து, தம் புன்மையான நலத்தை, விலை தருவாரிடம் எல்லாம் பரப்பும் பொது மகளிர் தோளினை, தம் புகழை நினைக்கும் உயர்ந்தோர் தீண்ட மாட்டார்கள்.

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்.
(917)
விளக்கம்:

நெஞ்சிலே பொருள் மேல் ஆசை கொண்டு, அதைப் பெறக் கருதிப் பொருள் தருபவரோடு உடலால் கூடியிருக்கும் மகளிரது தோள்களை, நெஞ்சமில்லாதவர்களே சேர்வர்.

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு.
(918)
விளக்கம்:

வஞ்சித்தலில் வல்ல மகளிரது முயக்கத்தை, அவ்வஞ்சனையை ஆராய்ந்து அறியும் அறிவுடையவர் அல்லாத பிறருக்கு, "அணங்கு தாக்கு" என்று சொல்வார்கள்.

வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.
(919)
விளக்கம்:

உயர்ந்தோர் இழிந்தோர் என்னும் எவரையும், விலை தந்தால் தழுவுகிற மகளிரது மெல்லிய தோள்கள், அறிவில்லாத கீழ்மக்கள் புகுந்து அழுந்தும் நரகம் ஆகும்.

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.
(920)
விளக்கம்:

எப்போதும் கவர்த்த மனத்தையுடைய மகளிர், கள், சூது என்னும் மூன்று தொடர்புகளும் திருமகளால் கைவிடப்பட்டவருக்கு நெருங்கிய நட்பு ஆகும்.