Showing posts with label 84. பேதைமை. Show all posts
Showing posts with label 84. பேதைமை. Show all posts

Sunday, May 31, 2009

84. பேதைமை

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டுஊதியம் போக விடல்.
(831)
விளக்கம்:

"பேதைமை" என்பதன் தன்மை என்னவென்றால், ஒன்றைச் செய்யும்போது வரும் துன்பத்தை ஏற்றுக் கொண்டு அதனால் வரும் ஊதியத்தை விட்டுவிடுதல் ஆகும்.


பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கண் செயல்.
(832)
விளக்கம்:

பேதைமை என்பவற்றுள் எல்லாம் பெரிய பேதைமையாவது விரும்பத்தகாத ஒரு செயலைச் செய்யத் தொடங்கி அதையும் பொருத்தமற்ற வகையில் செய்தல் ஆகும்.

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.
(833)
விளக்கம்:

பழிக்கு வெட்கப்படாமையும், நன்மைகளை விரும்பாதிருத்தலும், அன்பரிடம் அன்பு கொள்ளாமையும், எதனையும் பேணிக் காவாமையும் பேதையரது தொழிலாகும்.

ஓதி உணர்ந்தும் பிறர்குரைத்தும் தான்அடங்காப்
பேதையிற் பேதையர் இல்.
(834)
விளக்கம்:

நூல்களை முறையாகப் படித்து உணர்ந்தும், பிறர்க்கும் அதை சொல்லி வந்தும், தன் அடக்கத்தைக் கொள்ளாத பேதையிலும் பெரிய பேதையர் உலகில் எவரும் இல்லை.

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.
(835)
விளக்கம்:

இந்தப் பிறப்பில் பேதமைச் செயல்களையே செய்து வரும் பேதை, தொடர்ந்து வரும் ஏழு பிறப்பினையும், தான் புகுந்து அழுந்தும் நரகங்களாகவே காண்பான்.

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.
(836)
விளக்கம்:

ஒன்றின் செய்வகை அறியாத பேதை அதனைச் செய்வதற்கு முற்படுவதால், அது பொய்யாகிப் போவதுடன், அவனும் தளைபூண்கின்ற துயரத்தை அடைவான்.

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.
(837)
விளக்கம்:

பேதை, தன் முன்வினைப் பயனால் பெருஞ்செல்வத்தை அடைந்த காலத்தில், தொடர்பில்லாத பலரும் நன்றாக அனுபவிக்க, அவன் சுற்றத்தார் பசியால் வாடுவர்.

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.
(838)
விளக்கம்:

பேதை ஒரு பொருளைத் தனது உடைமையாகப் பெற்றால், மயங்கிய ஒருவன் மேன்மேலும் கள்ளைப் பருகியது போல நிலைமாறி வழி தவறி நடப்பான்.

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன்று இல்.
(839)
விளக்கம்:

ஒரு வகையில் பேதையோடு கொள்ளும் தொடர்பும் இனிமை தருவதேயாகும். அது தான் அவனைப் பிரிந்தவிடத்துத் துன்பம் தரும் தன்மை இல்லாதது.

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.
(840)
விளக்கம்:

சான்றோர்களின் கூட்டத்தில் ஒரு பேதை புகுதலானது, மாசுபடிந்த காலைக் கழுவாமல், தொழுகைக்குரிய பள்ளியினுள்ளே எடுத்து வைப்பது போன்றதாகும்.