Showing posts with label 14. ஒழுக்கம் உடைமை. Show all posts
Showing posts with label 14. ஒழுக்கம் உடைமை. Show all posts

Tuesday, May 26, 2009

14. ஒழுக்கம் உடைமை

14. ஒழுக்கம் உடைமை

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்.
(131)
விளக்கம்:

ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதாகும். அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகச் சான்றோரால் காக்கப்படும்.


பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
(132)
விளக்கம்:

வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்க வேண்டும். பலவும்ஆராய்ந்து கைக்கொண்டு தெளிந்தாலும்,ஒழுக்கமே உயிருக்குத் துணையாகும்.

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
(133)
விளக்கம்:

ஒழுக்கம் உடையவராக இருப்பதே உயர்ந்த குடிபிறப்பின் தன்மை ; ஒழுக்கம் கெடுதல் இழிந்த பிறப்பின் தன்மையாகி விடும்.

மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
(134)
விளக்கம்:

கற்றதை மறந்தாலும் மீண்டும் ஓதிக் கற்றுக் கொள்ளலாம். ஆனால், வேதமோதுவான் பிறப்பால் வந்த உயர்வு அவன் ஒழுக்கம் குன்றினால்கெடும்.

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.
(135)
விளக்கம்:

பொறாமை உடையவனிடத்திலே ஆக்கம் அமையாதது போல, ஒழுக்கம் இல்லாதவன் வாழக்கையிலும் உயர்வு இல்லை

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் பாடுபாக் கறிந்து.
(136)
விளக்கம்:

மன வலிமை உடையவர், ஒழுக்கம் குன்றுதலால் குற்றம் நேரிடுதலை அறிந்து, ஒழுக்கத்திலிருந்து ஒரு போதுமே பிறழ மாட்டார்கள்.

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
(137)
விளக்கம்:

ஒழுக்கத்தால் எல்லாரும் மேன்மை அடைவார்கள்; ஒழுக்கக் கேட்டால் அடையத்தகாத பழியை அடைவார்கள்.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
(138)
விளக்கம்:

நல்ல ஒழுக்கமானது இன்பமான நல்வாழ்வுக்கு வித்தாக இருக்கும் ; தீய ஒழுக்கமோ எக்காலத்தும் துன்பத்தையே தரும்.

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
(139)
விளக்கம்:

தீய சொற்களைத் தவறியும் தம் வாயினாற் சொல்லும் குற்றம், நல்ல ஒழுக்கம் உடையவர்களுக்கு ஒருபோதும் பொருந்தாத பண்பாகும்.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலர் தார்.
(140)
விளக்கம்:

உலகத்தவரோடு பொருந்தி ஒழுகும் தன்மையை அறியாதவர், பல நூல்களை கற்றிருந்தாலும் அறிவில்லாதவரே ஆவர்.