Sunday, May 31, 2009

40. கல்வி

கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
(391)
விளக்கம்:

கற்பதற்குரிய தகுதியான நூல்களைப் பழுதில்லாமல் கற்க வேண்டும்; கற்றதன் பின்னர் கற்ற அக்கல்வியின் தகுதிக்குத் தகுந்தபடி நடக்கவும் வேண்டும்.


எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு.
(392)
விளக்கம்:

எண் என்று சொல்லப்படுவதும், எழுத்து என்று கூறப்படுவதுமாகிய இவை இரண்டும், இவ்வுலகில் வாழும் உயிர்களுக்கு கண் எனப்படும்.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
(393)
விளக்கம்:

"கண்" உடையவர் என்று உயர்வாகக் கூறப்படுவோர் கற்றவரே ஆவர்; கல்லாதவர்கள் தம் முகத்தில் இரண்டு புண் உடையவர்கள் ஆவர்.

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
(394)
விளக்கம்:

எல்லோரும் மகிழும் வகையிலே கூடியிருந்து, "இனி என்று மீளக் கூடுவோம்" என்று எண்ணும்படியாகப் பிரிதல் கல்வியறிவினரது செயல் ஆகும்.

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்.
(395)
விளக்கம்:

செல்வர்களின் முன்னே உதவிகேட்கும் எளியவர் பணிவோடு நிற்பதுபோல, ஆசிரியரிடம் பணிந்து நின்று கற்றவரே சிறந்தவர்; கல்லாதவரே கடையர்.

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.
(396)
விளக்கம்:

மணலிலே தோண்டும் கிணற்றில், தோண்டிய அளவுக்கே நீத் ஊறும்; மாந்தருக்கும் அவரவர் முயன்று கற்றதன் அளவுக்கே அறிவும் ஊறிச் சுரக்கும்.

யாதானும் நாடாமல் ஊராமால் என்ஒருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
(397)
விளக்கம்:

கற்றவனுக்கு எந்த நாடும் நாடாகும்; எந்த ஊரும் ஊராகும்; இதுவே உண்மையாக இருந்தும் ஒருவன் சாகும் வரைக்கும் கல்லாமலிருப்பது எதனால்?

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.
(398)
விளக்கம்:

ஒரு பிறவியில் தான் கற்ற கல்வியானது, ஒருவனுக்குத் தொடர்ந்து வரும் ஏழு பிறப்புகளிலும் அவனைப் பாதுகாக்கும் சிறப்புடையது ஆகும்.

தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
(399)
விளக்கம்:

தாம் இன்பம் அடைவதாகிய கல்வியினாலே உலகத்தாரும் இன்பம் அடைவதைக் கண்டு, கற்றறிந்தவர், மேன்மேலும் தாம் கற்பதையே விரும்புவார்கள்.

கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை.
(400)
விளக்கம்:

"அழிவில்லாத சிறந்த செல்வம்" என்பது கல்விச் செல்வமே; மற்றைய பொன் பொருள் மண் என்னும் செல்வங்கள் ஒருவனுக்குச் சிறந்த செல்வம் ஆகா.

No comments:

Post a Comment