Showing posts with label 19. புறங்கூறாமை. Show all posts
Showing posts with label 19. புறங்கூறாமை. Show all posts

Tuesday, May 26, 2009

19. புறங்கூறாமை

19. புறங்கூறாமை

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.
(181)
விளக்கம்:

அறத்தைப்பற்றி வாயாலும், சொல்லாதவனாய் ஒருவன் தீய செயல்களையே செய்து வந்தாலும்,' அவன் பிறனைப் பழித்துப் புறங்கூறாதவன் ' என்பது இனிதாகும்.


அறனழீ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.
(182)
விளக்கம்:

அறத்தையே அழித்துத் தீமைகளைச் செய்து வருவதைக் காட்டிலும், இல்லாதபோது ஒருவனைப் பழித்துப் பேசி, நேரில் பொய்யாகச் சிரிப்பது தீமையாகும்.

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்.
(183)
விளக்கம்:

பிறர் இல்லாதபோது அவரைப் புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, இறந்து போதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.

கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல்.
(184)
விளக்கம்:

நேரில் நின்று இரக்கம் இல்லாமல் கடுமையாகப் பேசினாலும் பேசுக ; நேரில் இல்லாதபோது, பின்விளைவைக் கருதாமல் எந்தப் பழியையும் எடுத்துச் சொல்லக் கூடாது.

அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையால காணப் படும்.
(185)
விளக்கம்:

அறநூல்கள் கூறும் உள்ளமுள்ளவனாக ஒருவன் இல்லாத தன்மையினை, அவன் புறங்கூறுகின்றதால் அந்த இழிசெயலால் தெளிவாக அறியலாகும்.

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன் தெரிந்து கூறப் படும்.
(186)
விளக்கம்:

பிறனைப் பின்னால் பழித்துப் பேசுபவன், அவனுடைய பழிச் செயல்களுக் குள்ளும் இழிவானதைத் தெரிந்தெடுத்துக் கூறிப் பிறரால் மிகவும் பழிக்கப்படுவான்.

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.
(187)
விளக்கம்:

'மகிழ்ச்சியாகப் பேசி நட்பு கொள்ளுதல் நன்மை' என்று தெளியாதவரே, பிறர் தம்மைவிட்டு விலகுமாறு பழித்துப் பேசி, தமக்குள்ள நண்பரையும் பிரித்து விடுவர்.

துள்ளியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.
(188)
விளக்கம்:

நெருங்கிய நட்பினரின் குற்றத்தையும் புறத்தே பேசித் தூற்றும் இயல்பினர், அயலாரிடத்து எப்படி மோசமாக நடந்து கொள்வார்களோ?

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன் நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.
(189)
விளக்கம்:

ஒருவன் இல்லாததைப் பார்த்து, அவனைப் பற்றி இழிவான சொற்களை உரைப்பவனையும், அறத்தைக் கருதியேதான் உலகம் தாங்கிக் கொண்டிருக்கிறதோ?

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
(190)
விளக்கம்:

அயலாரின் குற்றங்களைக் காண்பது போலவே தம் குற்றங்களையும் காண்பாரானால், நிலைபெற்ற உயிர்கட்கு எத்தகைய தீமையும் உண்டாகுமோ?