Showing posts with label 126. நிறையழிதல். Show all posts
Showing posts with label 126. நிறையழிதல். Show all posts

Sunday, May 31, 2009

126. நிறையழிதல்

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
(1251)
விளக்கம்:

நாணம் என்னும் தாழ் பொருந்திய நிறை என்னும் கதவினைக் காமம் ஆகிய கோடறியானது உடைத்துத் தகர்த்து விடுகின்றது.


காமம் எனஒன்றே கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.
(1252)
விளக்கம்:

காமம் என்று சொல்லப்படும் ஒன்று கொஞ்சமேனும் கண்ணோட்டமே இல்லாதது. அது என் நெஞ்சத்தை இரவிலும் ஏவல் செய்துஆள்கின்றது.

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.
(1253)
விளக்கம்:

யான் காமநோயை என்னுள்ளேயே மறைக்க முயல்வேன். ஆனால் அதுவோ என் குறிப்பின்படி மறையாமல், தும்மல் போலத்தானே புறத்து வெளிப்பட்டு விடும்.

நிறையுடையேன் என்பேன்மன் யானோ என்காமம்
மறையிறந்து மன்று படும்.
(1254)
விளக்கம்:

இதுவரை நிறையோடு இருப்பதாகவே நினைத்திருந்தேன். ஆனால் என் காமம் என்னுள் மறைந்திருந்த எல்லையைக் கடந்துமன்றத்தில் வெளிப்படுகின்றதே.

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று.
(1255)
விளக்கம்:

தம்மை வெறுப்பவர் பின்னே அவர் அன்பை வேண்டிச் செல்லாத பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் ஒரு தன்மையேஅன்று.

செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தாரோ
எற்றென்னை உற்ற துயர்.
(1256)
விளக்கம்:

வெறுத்துக் கைவிட்ட காதலரின் பின் செல்லுதலை விரும்பிய நிலையிலேயே இருப்பதனால், என்னை அடைந்த இக்காமநோயானது எத்தன்மை உடையதோ.

நாணென ஒன்றோ அறியலம் காமத்தாற்
பேணியார் பெட்பச் செயின்.
(1257)
விளக்கம்:

நாம் விரும்பிய காதலரும் காமத்தால் நமக்கு வேண்டியவற்றைச் செய்தாரானால், நாமும் நாணம் என்று குறிக்கப்படும் ஒன்றையும்அறியாதேயே இருப்போம்.

பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம்
பெண்மை யுடைக்கும் படை.
(1258)
விளக்கம்:

பல மாயங்களையும் அறிந்த கள்வனாகிய காதலனின் பணிவான சொற்கள் அல்லவோ, அன்று நம் பெண்மை என்னும் அரணைஉடைக்கும் படையாய் இருந்தன.

புலம்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.
(1259)
விளக்கம்:

ஊடுவேன் என்று நினைத்துச் சென்றேன். ஆனால் என் நெஞ்சம் என்னை மறந்து அவரோடு சென்று கலந்து விடுவதைக் கண்டு,அவரைத் தழுவினேன்.

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்போம் எனல்.
(1260)
விளக்கம்:

தீயிலே கொழுப்பை இட்டாற்போல உருகும் நெஞ்சை உடையவரான மகளிருக்கு, இசைந்து ஊடி நிற்போம் என்று ஊடும்தன்மைதான் உண்டாகுமோ.