Showing posts with label 30. வாய்மை. Show all posts
Showing posts with label 30. வாய்மை. Show all posts

Saturday, May 30, 2009

30. வாய்மை

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
(291)
விளக்கம்:

வாய்மை என்று சொல்லப்படுவது யாது என்றால், அது பிறருக்குத் தீமை இல்லாதபடி யாதொரு சொல்லையும் எப்போதும் சொல்லுதல் ஆகும்.


பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
(292)
விளக்கம்:

குற்றமே இல்லாத நன்மையைத் தருவது என்றால், பொய்யான சொற்களும்கூட வாய்ம்மையின் இடத்தில் வைத்துச் சிறப்பாகக் கருதத் தகுந்தவை ஆகும்.

தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
(293)
விளக்கம்:

ஒருவன், தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைப் பற்றிப் பொய்த்துப் பேசாகதிருப்பானாக: அப்படி பொய்த்தபின்னர், அவன் நெஞ்சமே அவனைச் சுடும்.

உள்ளத்தாற் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.
(294)
விளக்கம்:

உள்ளத்தால் பொய்யாது நடந்து வருவானாயின், அவன், உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் இருப்பவன் ஆகும் சிறந்த உயர்வைப் பெறுவான்.

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.
(295)
விளக்கம்:

மனத்தொடு பொருந்திய வாய்மையையே ஒருவன் சொல்லி வருவானானால், அவன், தவத்தோடு தானமும் செய்பவரினும் மிகவும் சிறந்தவன் ஆவான்.

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்.
(296)
விளக்கம்:

பொய்யாமை போலப் புகழ் தருவது ஏதும் இல்லை: அதில் தளராமல் உறுதியாயிருப்பது ஒருவனுக்கு எல்லா அறத்தின் சிறப்பையும் தரும்.

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.
(297)
விளக்கம்:

பொய்யாமை என்னும் அறத்தையே பொய்யாகாது தொடர்ந்து செய்து வந்தால், பிற அறச் செயல்கள் ஏதும் செய்யாத போதிலும்கூட, அது நன்மையைத் தரும்.

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
(298)
விளக்கம்:

புறவுடலின் தூய்மை நீரால் ஏற்படும், உள்ளத்தில் தூய்மை அவனது வாய்மையால் (உண்மை பேசுவதால்) ஏற்படும்.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
(299)
விளக்கம்:

புற இருளைப் போக்கும் எல்லா விளக்கும் சிறந்த விளக்கு ஆகாது: சான்றோர்க்கு பொய்யாமையாகிய விளக்கே அவற்றிலும் சிறந்த விளக்காகத் தோன்றும்.

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.
(300)
விளக்கம்:

யாம் மெய்ப்பொருளாக அறிந்தவற்றுள் எல்லாம், வாய்மையினும் எத்தன்மையயாலும் சிறப்பான பொருள் இந்த உலகத்திலே வேறு எதுவும் இல்லை.