Showing posts with label 105. நல்குரவு. Show all posts
Showing posts with label 105. நல்குரவு. Show all posts

Sunday, May 31, 2009

105. நல்குரவு

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.
(1041)
விளக்கம்:

ஒருவனுக்கு வறுமையைப் போலத் துன்பம் தருவது யாதென்றால், அந்த வறுமையைப் போலத் துன்பம் தருவது அந்த வறுமையேயன்றி யாதுமில்லை.


இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.
(1042)
விளக்கம்:

வறுமை என்னும் ஒரு பாவி ஒருவனிடம் வந்துவிட்டால், அவனுக்கு இம்மையிலுள்ள உலக இன்பமும், மறுமையின் சுவர்க்க இன்பமும் இல்லாமல் போய்விடும்.

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.
(1043)
விளக்கம்:

வறுமை எனப்படும் கேடானது, ஒருவனுடைய பழைய குடும்பச் செல்வத்தையும், அதன் மேல் அக்குடும்பத்திற்கு உண்டான பெரும் புகழையும் கெடுத்து விடும்.

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.
(1044)
விளக்கம்:

இழிவான சொல் பிறவாத குடும்பத்தாரிடமும், அது பிறப்பதற்கு ஏதுவான சோர்வு என்னும் நிலைமையானது வறுமையை உண்டாக்கிவிடும்.

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.
(1045)
விளக்கம்:

வறுமை எனப்படும் துன்பம் ஒன்றின் உள்ளாகவே உலகத்தாரால் சொல்லப்படும் பலவகைப்பட்ட துன்பங்கள் எல்லாம் சென்று அடங்கிவிடும்.

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.
(1046)
விளக்கம்:

நல்லவான பொருள்களைத் தெளிவாக அறிந்து சொன்னார் ஆனாலும், வறுமைப்பட்டவர் சொல்லும் சொற்கள், பொருள் பயவாதவாய்ச் சோர்வு பட்டுவிடும்.

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.
(1047)
விளக்கம்:

அறத்தோடு பொருந்தாத வறுமையை உடையவன், தன்னைப் பெற்ற தாயாராலுங்கூட ஓர் அயலானைப் போலக் கருதிப் பார்க்கப்படுவான்.

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.
(1048)
விளக்கம்:

நேற்றுக் கொன்றதுபோலத் துன்பஞ்செய்த வறுமையானது, இன்றும் என்னிடத்தே வந்து விடுமோ? வந்தால், இனி யான் யாது செய்வேனோ?

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.
(1049)
விளக்கம்:

மந்திரமும் மருந்தும் முதலியவற்றின் உதவியாலே நெருப்பிற் கிடந்தும் உறங்கலாம். ஆனால் வறுமை வந்தபோது எதன் உதவியாலும் உறக்கம் வருவதில்லை.

துப்புரவு இல்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.
(1050)
விளக்கம்:

பொருளில்லாத வறுமையாளர் செய்யக் கூடியது முற்றத் துறத்தலே. அதனைச் செய்யாதிருப்பது, பிறர் வீட்டு உப்புக்கும் காடிக்கும் தாம் எமனாவதே ஆகும்.