Showing posts with label 34. நிலையாமை. Show all posts
Showing posts with label 34. நிலையாமை. Show all posts

Sunday, May 31, 2009

34. நிலையாமை

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
(331)
விளக்கம்:

நிலைத்து நில்லாத பொருள்களை எல்லாம் நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற இழிவான அறிவுடைமை மிகவும் தாழ்ந்ததாகும்.


கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.
(332)
விளக்கம்:

பெரும்பொருள் வந்தடைதல் கூத்தாடுமிடத்திலே கூட்டம் வந்து கூடுவதைப் போன்றதாகும். அது போய்விடுவதும் அக்கூட்டம் கலைவதைப் போன்றதே.

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.
(333)
விளக்கம்:

நிலைத்து இராத தன்மையுடையது செல்வம்: அதனை ஒருவன் அடைந்தால். அது நிலைப்பதற்கான அறமான செயல்களை அப்போதே செய்ய வேண்டும்.

நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாள்அது உணர்வார்ப் பெறின்.
(334)
விளக்கம்:

வாழ்வை ஆராய்ந்து உண்மை உணர்பவரைப் பெற்றால், நாள் என்பது ஒரு கால அளவுபோலத் தன்னைக் காட்டி உயிரை அறுக்கும் வாள் என்பது விளங்கும்.

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.
(335)
விளக்கம்:

நாக்கு உள்ளே இழுத்துக்கொண்டு விக்குள் மேலாக எழுந்து வருவதற்கு முன்பாகவே, நல்ல செயல்களை விரைவாகச் செய்ய வேண்டும்.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு.
(336)
விளக்கம்:

நேற்று இருந்த ஒருவன், இன்று இல்லை என்னும் நிலையாமையாகிய பெருமையை உடையதுதான் இந்த உலகம் ஆகும்.

ஒருபொழுதும் வாழ்வவது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.
(337)
விளக்கம்:

அடுத்த பொழுதில் உயிர் வாழும், வாழாது என்பதைத் தெரியாதவர்கள் நினைப்பது, கோடியும் அல்ல: அதன் மேலும் அளவற்ற பலவாகும்.

குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு.
(338)
விளக்கம்:

தான் இருந்த கூடானது தனித்துக் கிடக்கவும், பறவை பறந்து வெளியேறிப் போய்விட்டது போன்றதுதான் உடலோடு உயிருக்குள்ள தொடர்பு.

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
(339)
விளக்கம்:

ஒருவன் செயலில்லாமல் தூங்குவதைப் போன்றது சாக்காடு: அவன் மீண்டும் உறக்கத்திலிருந்து விழித்துக் கொள்வது போன்றதே பிறப்பு.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.
(340)
விளக்கம்:

உடலினுள் ஒரு மூலையிலே குடியிருந்த உயிருக்கு, நிலையாக நுழைந்து துவங்கியிருப்பதற்குரிய தகுதிவாய்ந்த ஓர் இடம் அமையவில்லை போலும்.