Showing posts with label 106. இரவு. Show all posts
Showing posts with label 106. இரவு. Show all posts

Sunday, May 31, 2009

106. இரவு

இரக்க இரத்தக்கார்க் காணின் சுரப்பின்
அவர்பழி தம்பழி யன்று.
(1051)
விளக்கம்:

தகுதியுள்ளவரைக் கண்டால், அவர்பால் இரந்து கேட்கலாம். அவர் தம்மிடம் ஏதும் இல்லையென்று ஒளிப்பாரானால் அவருக்குப் பழியேயன்றிக் கேட்பவருக்குப் பழியில்லை.


இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.
(1052)
விளக்கம்:

ஈவாரது நல்லுணர்வால் இரந்த பொருள்கள் துன்பமின்றி வருமானால், அவ்வாறு இரந்து நின்றதும், ஒருவனுக்கு உலகில் இன்பம் தருவதாகும்.

கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து.
(1053)
விளக்கம்:

ஒளிப்பதறியாத நெஞ்சமுடைய மானம் அறிபவரின் முன்னே போய் நின்று அவரிடம் ஒரு பொருளை இரந்தாலும் அப்படி இரப்பதும் வறியவர்க்கு ஓர் அழகு ஆகும்.

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.
(1054)
விளக்கம்:

ஒளிப்பதறியாத நெஞ்சமுடைய மானம் அறிபவரின் முன்னே போய் நின்று அவரிடம் ஒரு பொருளை இரந்தாலும் அப்படி இரப்பதும் வறியவர்க்கு ஓர் அழகு ஆகும்.

கரப்பிலார் வையகத்து உண்மையாற் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது.
(1055)
விளக்கம்:

முன்னால் நின்றபோதே அருளோடு அவருக்கு உதவுகிறவரும் இருப்பதனாலேதான் உயிரைக் காக்கும் பொருட்டாக இரக்கும் சிலரும் உலகில் உள்ளனர்.

கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.
(1056)
விளக்கம்:

உள்ளதை ஒளிக்கும் மனநோய் இல்லாதவரைக் கண்டால் மானம் விடாமல் இரப்பவருக்கு அவர் வறுமைத் துன்பங்கள் எல்லாம் ஒருங்கே அவரை விட்டுப் போய்விடும்.

இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.
(1057)
விளக்கம்:

தம்மை அவமதித்து இழிவாய்ப் பேசாமல் பொருள் தருவாரைக் கண்டால் இரப்பவரது நெஞ்சமும் மகிழ்ந்து உள்ளுக்கு உள்ளாகவே உவப்பது உண்டு.

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.
(1058)
விளக்கம்:

வறுமையால் இரப்பவர் இல்லையானால் குளிர்ந்த இடத்தையுடைய பெரிய உலகினரின் போக்கும் வரவும் மரப்பாவை இயந்திரக் கயிற்றால் சென்று வந்தாற் போன்றதாகும்.

ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.
(1059)
விளக்கம்:

தம்மிடம் வந்து ஒரு பொருளை இரந்து கொள்பவர் எவரும் இல்லாதபோது, கொடுப்பதற்கு விரும்புகிறவர்களுக்கும் இவ்வுலகத்திலே என்ன புகழ்தான் உண்டாகும்.

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி.
(1060)
விளக்கம்:

இரப்பவன் ஒருபோதும் தனக்குத் தராதவனை வெகுளாமல் இருக்க வேண்டும். பொருள் வேண்டிய பொழுது வந்து உதவாது என்பதற்கு அவன் வறுமையே சான்றாகும்.