Showing posts with label 94. சூது. Show all posts
Showing posts with label 94. சூது. Show all posts

Sunday, May 31, 2009

94. சூது

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉந்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.
(931)
விளக்கம்:

தான் வெல்பவன் ஆனாலும் சூதாடலை விரும்ப வேண்டாம். அவ்வெற்றியால் வரும் பொருளும், தூண்டில் இரும்பினை இரையென்று நினைத்து மீன் விழுங்கினாற் போன்றதே.


ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.
(932)
விளக்கம்:

பெறுவோம் என்னும் ஆசையால் நூற்றுக்கணக்காக இழந்து வறியவராகும் சூதருக்கும், பொருளால் நன்மைகளை அடைந்து வாழ்கின்ற நெறியும் ஒன்று உளதாகுமோ?

உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.
(933)
விளக்கம்:

உருளும் சுவற்றின் மீது கட்டப்படும் பந்தயப் பொருளை இடைவிடாது சொல்லிச் சூதாடுமாயின், ஈட்டிய பொருளும், வருவாயும் எல்லாம் எதிரிகளிடம் போய்ச் சேர்ந்து விடும்.

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.
(934)
விளக்கம்:

தன்னை விரும்பியவருக்குப் பலவகைத் துன்பங்களையும் செய்து அவரிடமுள்ள புகழையும் கெடுக்கும் சூதைப் போல், வறுமையைத் தரக் கூடியது வேறு எதுவும் இல்லை.

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.
(935)
விளக்கம்:

முன்காலத்திலே செல்வம் உடையவராயிருந்தும், தற்போது இல்லாதவரானவர்கள், கவற்றினையும், அது ஆடும் களத்தினையும், கைத்திறனையும் மேற்கொண்டு விடாதவரே.

அகடாரார் அல்லல் உழப்பர் சூதென்னும்
முகடியான் மூடப்பட் டார்.
(936)
விளக்கம்:

சூதென்னும் முகடியினாலே விழுங்கப்பட்டவர்கள், இம்மையிலே வயிறார உணவைப் பெறுவதுடன், மறுமையில் நரகத் துன்பத்திலும் சிக்கி வருந்துவார்கள்.

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.
(937)
விளக்கம்:

நல்லது செய்வதற்கு என்னும் காலமானது சூதாடு களத்தில் கழியுமானால், அது தொன்றுதொட்டு வந்த அவன் செல்வத்தையும் நல்ல பண்புகளையும் கெடுத்து விடும்.

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.
(938)
விளக்கம்:

பொருளையும் கெடுத்து, பொய்யை மேற்கொள்ளச் செய்து, அருளையும் கெடுத்து, சூதானது ஒருவனை இருமையும் துன்பத்திலே ஆழ்த்தி விடும்.

உடைசெல்வம் ஊண்ஒளி கல்வியென்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்.
(939)
விளக்கம்:

சூதாடலை வேடிக்கை என்று கருதிச் செய்வானானாலும், ஒளியும் கல்வியும் செல்வமும் ஊணும் உடையும் என்னும் இவை ஐந்துமே, அவனை அடையாமற் போய்விடும்.

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.
(940)
விளக்கம்:

இழக்கும் போதெல்லாம், மேன்மேலும் விருப்பங் கொள்ளுகின்ற சூதனைப் போல், உடம்பும் துன்பத்தால் வருந்த வருந்த மேன்மேலும் அதனை விரும்பும்.