Showing posts with label 9. விருந்து ஓம்பல். Show all posts
Showing posts with label 9. விருந்து ஓம்பல். Show all posts

Tuesday, May 26, 2009

9. விருந்து ஓம்பல்

9. விருந்து ஓம்பல்     

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
(81)
விளக்கம்:

இவ்வுலகில் இருந்து, பொருளைப் பேணி, இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி, உதவுதலின் பொருட்டே ஆகும்.


விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
(82)
விளக்கம்:

விருந்தாக வந்தவர் வெளியே சென்றிருக்க, தான் மட்டும் உண்ணுதல், சாவா மருந்தாகிய அமிழ்தமே என்றாலும் விரும்பத்தக்கது அன்று.

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுத லின்று.
(83)
விளக்கம்:

நாள் தோறும் தன்னை நாடி வரும் விருந்தினரைப் போற்றுகிறவனுடைய இல்வாழ்க்கை துன்பத்தால் பாழ்படுதல் என்றும் இல்லையாகும்.

அகனமர்ந்து செய்யான் உறையும் முகனமர்ந்து
நல் விருந்து ஓம்புவான் இல்.
(84)
விளக்கம்:

முகமலர்ச்சியோடு நன்முறையில் விருந்தினரைப் பேணுகிறவன் வீட்டிலே, உள்மலர்ச்சியோடு திருமகள் அகலாது தங்கியிருப்பாள்.

வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
(85)
விளக்கம்:

விருந்தினரைப் போற்றியபின், எஞ்சியதைத் தான் உண்ணுகிறவனுடைய நிலத்தில், விதையும் விதைக்க வேண்டுமோ?

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
(86)
விளக்கம்:

செல்லும் விருந்தினரையும் போற்றி, வரும் விருந்தையும் எதிர் பார்த்திருப்பவன் , வானத்துத் தேவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்.

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
(87)
விளக்கம்:

விருந்தோம்பலாகிய வேள்வியின் பயன் இன்ன அளவினது என்று கூறத்தக்கது அன்று: அது விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினது ஆகும்.

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.
(88)
விளக்கம்:

பொருளை வருத்தத்தோடு காத்து அது போய்விட்ட போது, தாம் பற்றில்லாதவர் என்பவர்கள், விருந்தைப் பேணி அந்த வேள்வி யில் ஈடுபடாதவரே யாவர்.

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவர்கண் உண்டு.
(89)
விளக்கம்:

பொருள் உடைமையுள்ளும் இல்லாமை என்பது, விருந்தோம்பலைப் பேணாத மடமையே: அஃது அறிவற்றவரிடமே உளதாகும்.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
(90)
விளக்கம்:

அனிச்ச மலர் மோந்தவுடனே வாடிவிடும்: முகம் மாறுபட்டு நோக்கிய உடனே விருந்தினரும் உள்ளம் வாடி விடுவார்கள்.