Showing posts with label 88. பகைத்திறம் தெரிதல். Show all posts
Showing posts with label 88. பகைத்திறம் தெரிதல். Show all posts

Sunday, May 31, 2009

88. பகைத்திறம் தெரிதல்

பகையெனும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற் றன்று.
(871)
விளக்கம்:

"பகை" என்று கூறப்படும் தீமை தருவதனை ஒருவன் விளையாட்டிடத்தில் என்றாலும் விரும்புதல் நன்மையாகாது. இதுவே நீதி நூல்களின் முடிந்த முடிபாகும்.


வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.
(872)
விளக்கம்:

வில்லை ஏராகவுடைய உழவரான மறவரோடு பகை கொண்டாலும், சொல்லை ஏராகவுடைய உழவரான நுண்ணறிவை உடையவரோடு பகை கொள்ளக் கூடாது.

ஏழுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.
(873)
விளக்கம்:

தான் துணைவலிமை இல்லாமல் தனியனாய் இருப்பதறிந்தும், பலருடன் பகைகொண்டு வாழும் அறிவற்றவன், பித்துற்ற மக்களிலும் அறிவிழந்தவன் ஆவான்.

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.
(874)
விளக்கம்:

தான் வேண்டும்போது, தன் பகைவருள் சிலரைப் பிரிந்து நண்பராக்கிக் கொள்ளும் சூழ்ச்சித் திறனுடைய அரசனின் பெருமையினுள்ளே இவ்வுலகமே அடங்கி விடும்.

தன்துணை யின்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றி னொன்று.
(875)
விளக்கம்:

"தனக்கு ஒரு துணை இல்லை, பகையோ எனில் இரண்டு" என்னும்போது அதனுள் ஒன்றை அப்போதைக்கு தனக்கு இனிய துணையாகுமாறு செய்துகொள்ளல் வேண்டும்.

தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.
(876)
விளக்கம்:

பகைவனை முன்பே தெளிந்தாலும் தெளியாவிட்டாலும், தனக்கு மற்றொரு செயலினாலே தாழ்வு வந்தவிடத்து அவரைக் கூடாதும் நீக்காதும் விட்டு வைக்க வேண்டும்.

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவ ரகத்து.
(877)
விளக்கம்:

தான் நொந்ததைத் தாமாகவே அறியாத நண்பருக்குச் சொல்ல வேண்டாம். வலியிழந்த நேரத்தை எதிர்பார்க்கும் பகைவரிடம் தன் மெலிவையும் புலப்படுத்த வேண்டாம்.

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.
(878)
விளக்கம்:

தான் செய்யும் செயலின் வகையை அறிந்து, அது முடிவதற்கு ஏற்றபடி தன்னைப் பெருக்கிச் சோம்பல் புகாமல் காக்கவே, பகைவரிடம் உள்ள செருக்குத் தானே தேய்ந்துவிடும்.

இளைதாக முன்மரங் கொல்க களையுநர்
கைகொல்லுங் காழ்த்த விடத்து.
(879)
விளக்கம்:

களைய வேண்டிய முன்மரத்தை அது இளைதான பொழுதே களைந்து விடுக. முதிர்ந்த பின் அதைக் களைதலைச் செய்தால் அது களைபவர் கையினைத் தான் களைந்து விடும்.

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.
(880)
விளக்கம்:

பகைவரின் செருக்கைக் கெடுக்கும் வாய்ப்பு வந்த போதும், அவர் மீதுள்ள இகழ்ச்சியான அதனைச் செய்யாத அரசர் பின்னர் உயிரோடு இருப்பதற்கும் உரியவர் ஆகார்.