Showing posts with label 118. கண் விதுப்பு அழிதல். Show all posts
Showing posts with label 118. கண் விதுப்பு அழிதல். Show all posts

Sunday, May 31, 2009

118. கண் விதுப்பு அழிதல்

கண்டாங் கலுழ்வ தென்கொலோ தண்டாநோய்
தாங்காட்ட யான்கண் டது.
(1171)
விளக்கம்:

இக்கண்கள் அவரைக் காட்டியதால் அல்லவோ நீங்காத இக்காமநோயை யாமும் பெற்றோம்; அவை, இன்று என்னிடம் காட்டச் சொல்லி அழுவது எதனாலோ?


தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன் ?
(1172)
விளக்கம்:

மேல் விளைவு பற்றி ஆராயாமல், அன்று அவரை நோக்கி மகிழ்ந்த கண்கள்,இன்று, என் துயரைப் பகுத்துணராமல், தாமும் துன்பப் படுவது எதனாலோ?

கதுமெனத் தாம்நோக்கித் தாமே கழலும்
இதுநகத் தக்கது உடைத்து.
(1173)
விளக்கம்:

அன்று தாமே விரைந்து பார்த்தும், இன்று தாமே அழுகின்ற கண்கள், தம்மால் அதன் அறியாமை கருதிச் சிரிக்கத் தகுந்த இயல்பினை உடையதாகும்.

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உல்வில்நோய் என்கண் நிறுத்து.
(1174)
விளக்கம்:

அன்று யான் உய்யாத அளவு தீராத காம நோயை என்னிடம் நிறுத்திய கண்கள், இன்று, தாமும் அழுவதற்கு மாட்டாதபடி நீர் வற்றி வறண்டு விட்டனவே.

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றா
காமநோய் செய்தஎன் கண்.
(1175)
விளக்கம்:

அன்று யான் கடலிலும் பெரிதான காம நோயை அன்று எனக்குச் செய்த இக்கண்கள், அத் தீவினையால், தாமும் உறங்காமல் இவ்விரவுப் பொழுதில் துன்பத்தை அடைகின்றன.

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.
(1176)
விளக்கம்:

எனக்கு இத்தகைய காமநோயைச் செய்த என் கண்கள், தாமும் துயில் பெறாமல் இப்படி அழுகையில் ஈடுபட்டது காண்பதற்கு மிகவும் இனியதாகும்.

உழந்துழந்து உண்ணீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்க்கண்ட கண்.
(1177)
விளக்கம்:

விரும்பி உள் நெகிழ்ந்து விடாதே, அன்று அவரைக் கண்டு மகிழ்ந்த கண்கள், இன்று துயிலாது வருந்தி வருந்தித் தம்மிடமுள்ள நீரும் அற்றே போவதாக!

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.
(1178)
விளக்கம்:

உள்ளத்தில் விருப்பமில்லாமல், பேச்சால் அன்பு காட்டியவர் இவ்விடத்தே உள்ளனர். அதனால் பயன் என்ன? அவரைக் காணாமல் என் கண்கள் அமைகின்றிலவே.

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.
(1179)
விளக்கம்:

காதலர் வந்த போது, அவர் வரவை எதிர்பார்த்துத் தூங்கா; வந்த போது, பிரிவஞ்சித் துயிலா; இருவழியும் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தையே அடைந்தன.

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணா ரகத்து.
(1180)
விளக்கம்:

எம்மைப் போல் அறைபறையாகிய கண்களை உடையவரின்,நெஞ்சில் அடக்கியுள்ள மறையை அறிதல் , அவ்வூரிலே உள்ளவர்க்கு மிகவும் எளியதாகும்.