Showing posts with label 124. உறுப்புநலன் அழிதல். Show all posts
Showing posts with label 124. உறுப்புநலன் அழிதல். Show all posts

Sunday, May 31, 2009

124. உறுப்புநலன் அழிதல்

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின காண்.
(1231)
விளக்கம்:

இந்தத் துன்பத்தை நமக்கு விட்டுவிட்டுத் தொலைவாகச் சென்று விட்ட காதலரை நினைத்து அழுவதனாலே, என் கண்கள், தம்அழகிழந்து நறுமலர்களுக்கு நாணின.


நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.
(1232)
விளக்கம்:

பசலை நிறத்தைப்பெற்று நீரைச் சொரியும் கண்கள், தம்மை முன்பு விரும்பிய நம் காதலர், இப்போது அன்பு செய்யாததைப்பிறருக்கும் சொல்வன போல் உள்ளனவே.

தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.
(1233)
விளக்கம்:

காதலரோடு கூடியிருந்த நாள்களிலே பூரித்திருந்த தோள்கள் மெலிவடைந்து, அவருடைய பிரிவைப் பிறருக்கு நன்றாகத்தெரிவிப்பவை போல் உள்ளனவே.

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.
(1234)
விளக்கம்:

தமக்குத் துணையான காதலரைப் பிரிந்ததால், தம் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், தம் பசிய தொடிகளையும் கழலச்செயகின்றனவே.

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.
(1235)
விளக்கம்:

தொடிகளும் கழன்று வீழ, தம் பழைய அழகும் கெட்டுப் போன தோள்கள், நம் துன்பத்தை அறியாத கொடியவரின் கொடுமையைஊரறிய சொல்கின்றனவே.

தொடியோடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.
(1236)
விளக்கம்:

தொடிகள் கழன்று வீழ்ந்து, தோள்களும் மெலிந்ததனால், காண்பவர் மனம் நொந்தவராக, அவரைக் கொடியவர் என்றுகூறக்கேட்டு, யானும் வருந்துவேனே.

பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோள் பூசல் உரைத்து.
(1237)
விளக்கம்:

நெஞ்சமே! கொடியவராகிவிட்ட காதலருக்கு என் வாடிய தோள்களின் ஆரவாரத்தை எடுத்துச் சொல்லி உதவியைச்செய்ததனனால் நீயும் பெருமை அடையாயோ.

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.
(1238)
விளக்கம்:

தழுவிய கைகளைத் தளர்த்திய அப்பொழுதிலேயே, பசிய தொடியணிந்த இப் பேதைமை உடையவளின் நெற்றியும் பசலைநிறத்தை அடைந்து விட்டதே.

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.
(1239)
விளக்கம்:

முயக்கத்திற்கு இடையே குளிர்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிதான மழை போன்ற கண்களும் அழகிழந்து பசலை நிறம்அடைந்து விட்டனவே.

கண்ணின் பசப்போ பருவால் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.
(1240)
விளக்கம்:

காதலியின் ஒளியுள்ள நெற்றி பசலை நிறம் அடைந்ததைக் கண்டு, அவளுடைய கண்களின் பசலை நிறமும் மேலும் பெருதுன்பம்அடைந்துவிட்டது.