Showing posts with label 58. கண்ணோட்டம். Show all posts
Showing posts with label 58. கண்ணோட்டம். Show all posts

Sunday, May 31, 2009

58. கண்ணோட்டம்

கண்ணோட்டம் என்னுங் கரிபொருள் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.
(571)
விளக்கம்:

கண்ணோட்டம் என்று சொல்லப்படுகிற மிகப் பெரிய அழகு இருப்பதனாலேதான், இவ்வுலகமும் அழிவை அடையாமல் நிலைபெற்றிருக்கிறது.


கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலைக்குப் பொறை.
(572)
விளக்கம்:

உலக நடைமுறை என்பது கண்ணோட்டத்தினால் நடந்து வருவதே. ஆகவே, கண்ணோட்டம் இல்லாதவர்கள் இருப்பது உலகத்திற்கு வீண் சுமைதான்.

பண்ணென்னாம் பாடற் கியைபின்றேல் கண்ணென்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.
(573)
விளக்கம்:

பொருளோடு பாடல் பொருந்தவில்லை என்றால் அந்த இசையினால் பயன் இல்லை; அதுபோலவே, கண்ணோட்டத்தோடு அமையாத கண்களாலும் பயன் இல்லை.

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.
(574)
விளக்கம்:

தேவையான அளவுக்குக் கண்ணோட்டம் இல்லாத கண்ணானது, முகத்திலே இருப்பது போலத் தோன்றுவதைத் தவிர, உடையவனுக்கு என்ன நன்மையைத் தரும்.

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.
(575)
விளக்கம்:

கண்ணிற்கு அழகு தரும் ஆபரணம் கண்ணோட்டமே. அந்தக் கண்ணோட்டமாகிய ஆபரணம் இல்லையானால், அது "புண்" என்றே சான்றோரால் கருதப்படும்.

மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு
இயைந்துகண் ணோடா தவர்.
(576)
விளக்கம்:

கண்ணோடு பொருந்தியவராக இருந்தும், கண்ணோட்டம் ஆகிய செயல்களைச் செய்யாதவர்கள், மண்ணோடு பொருந்தியுள்ள மரத்தைப் போன்றவர்கள் ஆவர்.

கண்ணோட்ட மில்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.
(577)
விளக்கம்:

கண்ணோட்டம் இல்லாதவர்கள், கண்கள் இருந்தாலும் குருடர்களே. கண்ணுடையவர்கள் கண்ணோட்டம் இல்லாமல் இருத்தல் என்பது பொருத்தமில்லை.

கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு.
(578)
விளக்கம்:

தொழிலிலே கெடுதல் ஏற்படாமல், எவரிடமும் கண்ணோட்டத்துடன் நடந்துகொள்ள வல்லவர்களுக்கு, இவ்வுலகமே உரிமை உடையதாகும்.

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.
(579)
விளக்கம்:

தம்மை வறுத்தும் தன்மை உடையவரிடத்திலும், கண்ணோட்டம் உடையவராக, அவரது குற்றத்தையும் பொறுத்து நடக்கும் பண்பே சிறந்ததாகும்.

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
(580)
விளக்கம்:

விரும்பத்தகுந்த 'கண்ணோட்டம்' என்னும் நாகரிகத்தை விரும்பம் சான்றோர்கள், பழகியவர் நஞ்சை பெய்வதைக்கண்டாலும், அதனை உண்டு அமைவார்கள்.