Showing posts with label 131. புலவி. Show all posts
Showing posts with label 131. புலவி. Show all posts

Sunday, May 31, 2009

131. புலவி

புல்லா திராஅப் புலத்தை அவருறும்
அல்லல்நோய் காண்கஞ் சிறிது.
(1301)
விளக்கம்:

நாம் ஊடுரும்போது அவர் அடைகின்ற அல்லல் நோயையும் சிறிது நேரம் காணலாம். அதற்காக அவர் வந்ததும் அவர்பாற்சென்று தழுவாமல் பிணங்கியிருப்பாயாக.


உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.
(1302)
விளக்கம்:

உணவுப் பண்டங்களில் அளவாக உப்புச் சேர்ந்திருப்பது போன்றதே ஊடல். அதை அளவுகடந்து சிறிது நீளவிட்டாலும் உப்பின்மிகுதிபோல அது கெட்டுவிடும்.

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.
(1303)
விளக்கம்:

தம்மோடு ஊடியவரைத் தெளிவித்து தழுவாமல் விட்டுவிடுதல், துன்புற்று வருந்துவோரை மேலும் துன்பஞ் செய்து வருந்தச்செய்வதுபோன்ற கொடுமையாகும்.

ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.
(1304)
விளக்கம்:

ஊடிப் பிணங்கியவரைத் தெளிவித்து அன்பு செய்யாமல் கைவிடுதல், முன்பே நீரில்லாது வாடிப்போன வள்ளிக்கொடியின் வேரைஅறுப்பதுபோன்றது ஆகும்.

நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை
பூவன்ன கண்ணா ரகத்து.
(1305)
விளக்கம்:

நல்ல தகைமைகள் பொருந்தியுள்ள நல்ல ஆடவருக்கு அழகாவது, மலரன்ன கண்களையுடைய அவர் காதலியர் இடத்தேஉண்டாகும் ஊடலின் சிறப்பே ஆகும்.

துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.
(1306)
விளக்கம்:

பெரிய பிணக்கமும் சிறிதான பிணக்கமும் இல்லாமற் போனால், காமமானது மிகக் கனிந்த கனியும் பழுக்காத கருக்காயும் போலபயனற்றதாகும்.

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று.
(1307)
விளக்கம்:

ஊடியிருத்தலிலும் காதலர்க்கு உண்டாவதோர் துன்பம் உளது. அது கூடியிருப்பதுதான் இனிமேல் நீட்டிக்காதோ என்று நினைத்துவருந்தும் அச்சமாகும்.

நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.
(1308)
விளக்கம்:

நம்மாலே இவரும் நோயுற்றார் என்று உணர்ந்து அதைத் தீர்க்க முயலும் காதலர் இல்லாதபோது வீணாக வருத்தம் அடைவதனால்என்ன பயன்?

நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.
(1309)
விளக்கம்:

நீரும் நிழலிடத்தே உள்ளதானால் இனியதாகும். அதுபோன்றதே ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தே நிகழுமானால்இனிமையைத் தருவதாகும்.

ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.
(1310)
விளக்கம்:

ஊடல் கொண்டபோது தெளிவித்து இன்பம் செய்யாமல் வாடவிடுகின்றரோடு, எம் நெஞ்சம் கூடுவோம் என்று நினைப்பது அதுகொண்டுள்ள ஆசையினாலே ஆகும்.