Showing posts with label 72. அவையறிதல். Show all posts
Showing posts with label 72. அவையறிதல். Show all posts

Sunday, May 31, 2009

72. அவையறிதல்

அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.
(711)
விளக்கம்:

சொல்லின் தொகையை அறிந்த தூய அறிவாளர்கள், அவையின் தன்மையை அறிந்து, தாம் சொல்லப் போவதையும் நன்றாக ஆராய்ந்தே, எதனையும் சொல்ல வேண்டும்.


இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்.
(712)
விளக்கம்:

சொல்லின் நடையை அறிந்த நல்லறிவை உடையவர்கள், தாமிருக்கும் அவையின் தன்மையைத் தெரிந்து, சொல்ல வேண்டியவற்றை உணர்ந்தே சொல்ல வேண்டும்.

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.
(713)
விளக்கம்:

தாமிருக்கும் அவையின் தன்மையை அறியாதவர்களாக, ஒன்றைச் சொல்பவர்கள் சொல்லின் வகையை அறியாதவர்கள்; அவர்களால் எதையும் சாதிக்க முடியாது.

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.
(714)
விளக்கம்:

அறிவினாலே ஒளியுடையவர் முன்பாகத் தாமும் அறிவொளியினர் ஆக வேண்டும்; அறிவிலாதவர் முன்பாக, சுண்ணாம்பு வண்ணங் கொள்ளுதல் போல ஆகி விட வேண்டும்.

நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.
(715)
விளக்கம்:

அறிவால் முதிர்ந்தவர் அவையிலே, அவர்கள் கருத்துக்களைக் கேட்டறியும் முன்பாக எதையும் சொல்லாத அடக்கமானது; சிறந்த நன்மை தருவது.

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.
(716)
விளக்கம்:

விரிந்த அறிவு நுட்பங்களை அறிந்தவர் முன் சென்று பேசிக் குற்றப்படுதல், ஆற்று வெள்ளத்தில் நீந்துபவன் இடையிலே நிலை தளர்ந்தால் போன்றதாம்.

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொற்றரிதல் வல்லார் அகத்து.
(717)
விளக்கம்:

குற்றம் இல்லாமல் சொற்களின் பொருள்களைத் தெரிவதற்கு வல்லமை உள்ளவர்களிடையே, கற்றறிந்த கல்வியறிவு மேலும் விளக்கம் பெற்றுத் தோன்றும்.

உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.
(718)
விளக்கம்:

சொல்லின் பயனை உணர்கின்றவர்களின் முன்பாக ஒன்றைச் சொல்லுதல், நல்ல பயிர் வளருகின்ற பாத்தியினுள்ளே, நீர் சொரிந்தாற் போலப் பெரும்பயன் தருவதாகும்.

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்கு செலச்சொல்லு வார்.
(719)
விளக்கம்:

நல்ல அறிவாளிகள் கூடியுள்ள அவையிலே, அவர்களுக்கு நன்றாக பதியுமாறு சொல்லுகிறவர்கள், புல்லறிவினர் கூட்டத்திலே, மறந்தும் பேசாதிருக்க வேண்டும்.

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர்
அல்லார்முன் கோட்டி கொளல்.
(720)
விளக்கம்:

தம்போன்ற அறிவுடையவர்கள் அல்லாதவரின் முன்பாக ஒன்றைப் பற்றி விரிவாக பேசுதல், அங்கணத்துள்ளே அமுதைக் கொட்டியது போல் பாழாகிவிடும்.