Showing posts with label 29. கள்ளாமை. Show all posts
Showing posts with label 29. கள்ளாமை. Show all posts

Saturday, May 30, 2009

29. கள்ளாமை

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
(281)
விளக்கம்:

உலகினரால் இகழப்படாமல் வாழ விரும்புகிறவன் எத்தகைய பொருளையும் களவாடிக் கொள்ள நினையாதபடி தன் மனத்தை முதலில் காத்தல் வேண்டும்.


உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளைக்
கள்ளத்தாற் கள்வேம் எனல்.
(282)
விளக்கம்:

பிறன் பொருளைக் கள்ளமாகக் களவாடிக் கொள்வோம் என்று, ஒருவன். தன் உள்ளத்தால் நினைத்தாலும் அந்த நினைவுக்கூடத் தீமையானதே.

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.
(283)
விளக்கம்:

களவாலே வந்தடையும் செல்வமானது அளவு கடந்து பெருகுவது போலவே, எதிர்பாராமல் எல்லாம் வந்தது போல விரைந்து ஒழிந்தும் விடும்.

களவின்கண் கன்றிய காதல் வினைவின்கண்
வீயா விழுமம் தரும்.
(284)
விளக்கம்:

களவு செய்வதிலே உண்டாகும் முதிர்ந்த விருப்பமானது, அதனால் வரும் விளைவுகளின் போது தீராத துன்பத்தைத் தருவதாகவே விளங்கும்.

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
(285)
விளக்கம்:

பொருள் தேடுதலையே. நினைத்துப் பிறர் சோர்ந்திருக்கும் காலத்தைப் பார்க்கும் கள்வரிடத்தே, அருளைக் கருதி அன்புடையராதல்.சான்றோரிடம் இல்லை.

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.
(286)
விளக்கம்:

களவுநெறியின் கண் மிக முதிர்ந்த ஆசையுடையவர்கள் எல்லாரும், தம் வருவாயின் அளவுக்குத் தகுந்தபடி ஒழுக்கத்தோடு வாழ இயலாதவர்களே.

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்.
(287)
விளக்கம்:

களவு எனப்படும் இருள்படர்ந்த அறிவாண்மையானது. அளவறிந்து வாழும் ஆற்றலை விரும்பிய நன்மக்களிடத்திலே ஒரு போதும் இல்லை யாகும்.

அளவறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.
(288)
விளக்கம்:

அளவறிந்து வாழ்தலை அறிந்தவரின் நெஞ்சத்திலே அறம் நிற்பது போல, டுளவுத் தொழிலை அறிந்தவரின் நெஞ்சிலே வஞ்சகம் எப்போதும் நிலைத்திருக்கும்.

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.
(289)
விளக்கம்:

களவு அல்லாத பிற நல்ல ணியற்சிகளைச் செய்து பொருள் தேடி வாழ்தலைத் தெளியாதவர்கள், அளவுகடந்த செலவுகளைச் செய்து அக் களவாலே அழிவார்கள்.

கள்வர்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேன் உலகு.
(290)
விளக்கம்:

களவு செய்வார்க்கு, உடலில் உயிர் நிலைக்கும், காலமும் தவறிப் போகும்: களவு செய்யாதவர்களுக்குத் தேவருலகத்து வாழ்வும் தவறிப் போகாது.