Showing posts with label 20. பயனில சொல்லாமை. Show all posts
Showing posts with label 20. பயனில சொல்லாமை. Show all posts

Tuesday, May 26, 2009

20. பயனில சொல்லாமை

20. பயனில சொல்லாமை

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
(191)
விளக்கம்:

பலரும் வெறுக்கும்படி பயனில்லாத சொற்களையே சொல்லும் ஒருவன், உலகினர் எல்லாராலுமே இகழ்வாய்ப் பேசப்படுவான்.


பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது.
(192)
விளக்கம்:

பலபேர் முன்பாகப் பயனற்ற பேச்சைப் பேசுதல், நன்மை அல்லாத செயலை நண்பர்களிடத்தில் செய்வதைவிடத் தீமையானது ஆகும்.

நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித்து உரைக்கும் உரை.
(193)
விளக்கம்:

பயன் இல்லாத ஒன்றைப் பற்றியே விரிவாகப் பேசும் ஒருவனது பேச்சானது, 'அவன் நல்ல பண்பில்லாதவன் 'என்பதை உலகுக்கு அறிவிக்கும்.

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லார் அகத்து.
(194)
விளக்கம்:

பயனோடு சேராத பண்பற்ற சொற்களைப் பலரோடும் சொல்லுதல், எந்த நன்மையையும் தராததோடு உள்ள நன்மையையும் போக்கிவிடும்.

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை உடையார் சொலின்.
(195)
விளக்கம்:

நல்ல பண்பு உடையவர்களும், பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்களானால், அவர்களுடைய சிறந்த தன்மையும் சிறப்பும் நீங்கிப் போகும்.

பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல்.
(196)
விளக்கம்:

பயனில்லாத சொற்களையே விரும்பித் தொடர்ந்து பேசுபவனை ,' மனிதன்' என்றே சொல்லக் கூடாது ; மக்களுள், 'பதர் ' என்றே கொள்ளல் வேண்டும்.

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
நபயனில சொல்லாமை நன்று.
(197)
விளக்கம்:

நன்மை இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம். பயனில்லாத சொற்களை எப்போதுமே சான்றோர் சொல்லாமலிருத்தல் நல்லது.

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.
(198)
விளக்கம்:

அருமையான பயன்களை ஆராய்கின்ற அறிவாளர்கள், பெரும் பயனில்லாத சொற்களை ஒரு போதுமே சொல்ல மாட்டார்கள்.

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
பெரும்பயன் இல்லாத சொல்.
(199)
விளக்கம்:

மனமயக்கம் நீங்கிய குற்றமற்ற அறிவை உடையவர்கள், பயனில்லாத சொற்களை மறந்தும்கூட ஒரு காலத்திலும் சொல்ல மாட்டார்கள்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
(200)
விளக்கம்:

சொன்னால், பயன் தருகின்ற சொற்களையே யாவரும் சொல்லுக ; பயனில்லாத சொற்களை ஒருபோதுமே எவரும் சொல்லாதிருக்க வேண்டும்.