Showing posts with label 43. அறிவுடைமை. Show all posts
Showing posts with label 43. அறிவுடைமை. Show all posts

Sunday, May 31, 2009

43. அறிவுடைமை

அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்.
(421)
விளக்கம்:

இறுதிக்காலம் வரையும் காப்பாற்றும் கருவி அறிவு ஆகும்; பகைவருக்கும் உட்புகுந்து அழிக்க இயலாத கோட்டையும் அந்த அறிவு ஆகும்.


சென்ற இடத்தால் செலவிடாது தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.
(422)
விளக்கம்:

மனத்தை அது சென்ற இடங்களிலேயே செல்லவிடாமல், தீமைகளிலிருந்து விலக்கி, நன்மையில் மட்டுமே செல்ல விடுவது அறிவு ஆகும்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
(423)
விளக்கம்:

எந்தப் பொருளைப் பற்றியும், எவரெவரிடமிருந்து கேட்பதானாலும், அப்பொருளின் மெய்யான தன்மைகளைக் காண்பதுதான் அறிவு ஆகும்.

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு.
(424)
விளக்கம்:

கேட்பவருக்குப் புரியும்படி எளிமையாகத் தான் விளக்கிச் சொல்லியும், பிறரின் பேச்சுக்களில் உள்ள நுண்மையான பொருளைக் காண்பதும் அறிவு ஆகும்.

உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு.
(425)
விளக்கம்:

உயர்ந்தவர்களைத் தன்னுடையவர்களாகச் செய்து கொள்வதே அறிவு; அத்தொடர்பிலே முதலில் மகிழ்தலும் பின்னர் குவிதலும் இல்லாததும் அறிவு ஆகும்.

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு.
(426)
விளக்கம்:

உயர்ந்தோர் எவ்வாறு வாழ்கிறார்களோ, அவ்வாறே, அந்த உயர்ந்தவர்களோடு தானும் அங்ஙனமே வாழ்வதுதான் அறிவுடைமை ஆகும்.

அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதுஅறி கல்லா தவர்.
(427)
விளக்கம்:

பின்னே வரப்போவதை முன்னாலேயே அறிபவர்களே அறிவுடையவர்; அவ்வாறு அறிந்து நடப்பதற்குக் கல்லாதவர்களே அறிவில்லாதவர் ஆவர்.

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.
(428)
விளக்கம்:

அஞ்ச வேண்டியவைகளுக்கு அஞ்சாமல் நடப்பது அறிவில்லாத தன்மை ஆகும்; அஞ்ச வேண்டியதற்கு அஞ்சி விலகி நடப்பதே அறிவுடையவர் செயலாகும்.

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்.
(429)
விளக்கம்:

பின்னர் வரப்போவதை முன்னதாகவே அறிந்து காக்கும் அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வருவதான ஒரு துன்பமும் இல்லை.

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.
(430)
விளக்கம்:

அறிவுடையோர் எல்லா நன்மையுமே உடையவர் ஆவர்; அறிவில்லாதவர் எதனை உடையவரானாலும் எந்த நன்மையும் இல்லாதவரே ஆவர்.